விவிலிய உரைக்கூற்றுகளின்படி இயேசுவின் துன்பமும் சிலுவைச் சாவும்[தொகு]
நற்செய்திச் சான்றுப்படி, எருசலேம் கோவில் காவலர்களும் யூதாஸ் இஸ்காரியோத்தும் இயேசுவை கெத்சமனி தோட்டத்தில் கைதுசெய்தார்கள். இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுகளைக் கூலியாகப் பெற்றிருந்தார். கைதுசெய்யப்பட்ட இயேசுவை முதலில் அன்னாஸ் என்பவரின் முன் கொண்டு சென்றார்கள். இவர் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபா என்பவரின் மாமனார். பின் தலைமைக் குரு இயேசுவை விசாரித்தார்.
இயேசுவுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஆனால் அவை முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. இயேசு எருசலேம் கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டி எழுப்புவதாகக் கூறினார் என்றொரு குற்றச்சாட்டு. அவர் தம்மைக் கடவுளுக்கு நிகராக்கிக் கொண்டார் என்றொரு குற்றச்சாட்டு.
அப்போது தலைமைக் குரு இயேசுவை நோக்கி, "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்" என்றார். அதற்கு இயேசு, "நீரே சொல்லுகிறீர்" என்று பதிலிறுக்கவே தலைமைக் குரு இயேசு கடவுளைப் பழித்ததாகக் கூறினார். உடனே, கூடியிருந்த மக்கள் "இவன் சாக வேண்டியவன்" என்று பதிலிறுத்தார்கள்.
இதற்கிடையில் இயேசுவின் சீடர்கள் இயேசுவைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் ஓடிவிட்டார்கள். தலைமைச் சீடராய் இருந்த பேதுரு கூட "இயேசுவை அறியேன்" என்று கூறி மும்முறை மறுதலித்தார். ஆயினும் பின்னர், தாம் இவ்வாறு கோழையாக நடந்து கொண்டதற்காகவும் தம் குருவும் ஆண்டவருமான இயேசுவை மறுதலித்ததற்காகவும் மனம் நொந்து அழுதார்.
அதன்பின், இயேசுவை உரோமை ஆளுநரான பொந்தியு பிலாத்து என்பவரின் முன் கொண்டுசென்றார்கள். பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, அவரிடத்தில் யாதொரு குற்றமும் இல்லை என்று மக்கள் கூட்டத்திடம் சொல்லிப் பார்த்தார். இயேசு கலிலேயப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிந்து பிலாத்து அவரைக் கலிலேயாவை ஆண்ட ஏரோதிடம் அனுப்பினார். யூதர்களின் பாஸ்கு விழாவுக்காக ஏரோது எருசலேமில் இருந்தார். ஏரோது கேட்ட கேள்விகளுக்கு இயேசு பதில் ஒன்றும் தராமல் அமைதி காத்தார்.
பின்னர் பிலாத்து இயேசுவைக் கசையால் அடிக்கச் செய்து அவரை விடுதலை செய்ய முனைந்தார். ஆனால் மக்களோ இயேசுவை விடுதலை செய்யக் கூடாது என்றும், பரபா என்னும் குற்றவாளியை விடுதலை செய்யவும் கூறினார்கள். இயேசுவை என்ன செய்யவேண்டும் என்று பிலாத்து கேட்டதற்கு மக்கள், "சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்தினார்கள்.
இயேசுவை விடுதலை செய்தால் பெரிய கலவரம் நிகழும் என்றும் தன் பதவி பறிபோகும் என்று அஞ்சிய பிலாத்து, "இவனது இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை" என்று கூறித் தன் கைகளைக் கழுவினார்.
படைவீரர்கள் இயேசுவின் ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தார்கள். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மீது வைத்து, அவரது வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர்முன் முழந்தாட்படியிட்டு, "யூதரின் அரசரே, வாழ்க!" என்று சொல்லி ஏளனம் செய்தனர். அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர். இவ்வாறு ஏளனம் செய்த பிறகு, அவருடைய பழைய ஆடைகளை அவருக்கு மீண்டும் உடுத்தி, அவருடைய தோள்மீது சிலுவையைச் சுமத்தினார்கள். இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" (கல்வாரி - Calvary = the place of the skull) என்னும் இலக்கு நோக்கி நடந்தார்.
சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவினார். பெருந்திரளான மக்கள் இயேசுவுக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே சென்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக எழ வேண்டாம்; மாறாக, உங்களுக்காகவும் உங்க்ள் மக்களுக்காகவும் அழுங்கள்" என்றார்.
"மண்டை ஓடு" எனப்படும் இடத்திற்கு வந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலுமாக இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் ஏற்றினார்கள்.
இதுவே நற்செய்தி நூல்கள் இயேசுவின் துன்பங்கள் பற்றியும் அவர் சிலுவையைச் சுமந்து சென்று, ஒரு குன்றின்மேல் சிலுவையில் அறையப்பட்டது பற்றியும் தரும் சான்றுகளின் சுருக்கம்.